ஒன்றிய அரசால் இந்தியாவில் முன்னெடுக்கப்படவுள்ள தொகுதி மறுவரையறை செயல்முறைக்கு “நாட்டைக் காப்போம்” இயக்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இது குறித்து நாட்டைக்காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ஜே.ராஜன் விடுத்துள்ள அறிக்கையில்
மத்திய அரசு, அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா 2026ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களின் உரிமையை பறிப்பதாகவே உள்ளது. அரசியல் தலைவர்கள், 1976இல் ஒரு சட்ட சீர்திருத்தத்தை கொண்டு வந்தார்கள். அதாவது குடும்ப கட்டுப்பாடு விஷயத்தில் வட மாநிலங்கள் கோட்டை விட்டுவிட்டன. எனவே அடுத்த 25 வருஷத்துக்கு தொகுதி மறுவரையறை செய்ய கூடாது என்று சட்ட சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த 25 ஆண்டு காலக்கெடு, 2001ம் ஆண்டுடன் நிறைவடைந்தது. இத்தனை ஆண்டுகளில் வட மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதா? என்று கேட்டால் இல்லை. எனவே மற்றொரு 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறையை ஒத்தி வைக்க சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இப்படி இருக்கையில், இந்த 2026 ஆண்டிலும் வட மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவில்லை.என்றும் "
தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா போன்ற தென் மாநிலங்கள் கடந்த பல ஆண்டுகளாக குடும்ப கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, மக்கள்தொகையை கட்டுக்குள் வைத்துள்ளன. இப்போது மக்கள்தொகையை மட்டும் அடிப்படையாக கொண்டு தொகுதிகளை மாற்றினால், சிறப்பாக செயல்பட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையும்.இது அந்த மாநிலங்களை தண்டிக்கும் செயலாகும். வட மாநிலங்கள் மற்றும் மேற்கு மாநிலங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.
மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை 543 லிருந்து 815 ஆக உயர்த்தும் முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மக்கள் தொகை அதிகமான மாநிலங்களில் உறுப்பினர் எண்ணிக்கை உயரும். அதே நேரத்தில் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் உறுப்பினர் எண்ணிக்கை குறையும் அபாயம் உள்ளது.
தற்போது 1971 மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மாற்றி 2011 மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தொகுதிகளை மறுவரையறை செய்ய ஒன்றிய அரசு முயற்சிப்பது மாநிலங்களுக்கிடையேயான அரசியல் சமநிலையை பாதிக்கும், இந்த முயற்சி ஜனநாயகத்திற்கும் கூட்டாட்சி அமைப்பிற்கும் எதிரானதாகும். இது வடக்கு தெற்கு என்ற பிளவை அதிகப்படுத்தும்.
இந்த நடவடிக்கை, மக்கள் தொகை கட்டுப்பாட்டில் முன்னேற்றம் கண்ட மாநிலங்களுக்கு தண்டனை அளிக்கும் செயல் ஆகும். மக்கள் தொகையை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு பிரதிநிதித்துவத்தை நிர்ணயிப்பது அநீதி ஆகும். சமூக முன்னேற்றம், மனித வள மேம்பாடு மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்பட்ட மாநிலங்களின் சாதனைகளை புறக்கணிக்கும் செயலும் கூட என்றும்.
மாநிலங்களின் உரிமைகள் பறிபோகும் வகையில் நடைபெறும் எந்த மாற்றத்தையும் ஏற்க முடியாது. ஏற்கனவே வரி பகிர்வில் தென் மாநிலங்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்படுகிறது. தமிழகம் வழங்கும் ஒரு ரூபாய் வரியில் 20 முதல் 30 பைசா மட்டுமே திரும்ப கிடைக்கிறது. ஆனால், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு இரண்டு ரூபாய்க்கு மேல் வழங்கப்படுகிறது. அரசியல் அதிகாரமும் பறி போனால், தென் மாநிலங்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கவே முடியாத நிலை ஏற்படும்.
கூட்டாட்சி அமைப்பின் சமநிலையை காக்க வேண்டியது அரசின் கடமை. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் குரலை பலவீனப்படுத்தும் முயற்சியாக இதனை பார்க்கப்படுகிறது.
2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியிருக்க வேண்டும். அதுவும் சாதிவாரி கணக்கெடுப்பாக அது இருக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால் ஒன்றிய அரசு அதை தள்ளிப் போட்டுக்கொண்டே உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் நிறைய உண்மைகள் வெளிவரும். சமூக நீதி அடிப்படையிலான திட்டமிடலுக்கு அரசு தள்ளப்படும் என்று ஒன்றிய அரசு அஞ்சுகிறது. 2027இல் தான் டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறி விட்டு இப்போது தன்னிச்சையாக இம்முடிவை எடுப்பது முறையற்றது. முதலில் மக்கள் தொகை கணக்ககெடுப்பை நடத்த அரசு முன்வரவேண்டும். பிறகு தொகுதி மறுசீரமைப்பு பற்றி கவலைப்பட வேண்டும்.
எனவே, இதனை ஒட்டி நாடு முழுவதும் விரிவான பொதுக் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என “நாட்டைக் காப்போம்” இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக நாட்டைக் காப்போம் அமைப்பின் ஒருகிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ஜே. ராஜன் தசை கடுமை யான கண்டனத்தை பதிவு செய்தார்.
No comments:
Post a Comment