திருச்சி பஞ்சப்பூரில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு..கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு. - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, March 11, 2026

திருச்சி பஞ்சப்பூரில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு..கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு.





 திருச்சியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; பஞ்சப்பூரில்  ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்.

பாரத பிரதமர் மோடி கேரள சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு திருச்சி விமான நிலையத்திற்கு ஐந்து முப்பது மணிக்கு வந்தடைந்தார். விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.

இதையடுத்து திருச்சி விமான நிலையத்திலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம்  பஞ்சப்பூரில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். 

இந்த விழாவில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எல்.முருகன், மாநில அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில், சுமார் ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார் பிரதமர்.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு, மசகு எண்ணெய் உற்பத்தி, கிராமப்புற இணைப்பு, நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் ரயில் சேவைகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பெட்ரோலியத் துறையில், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சுமார் ரூ.3,680 கோடி முதலீட்டில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் நகர எரிவாயு விநியோக வலையமைப்புக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இந்தத் திட்டம் 8.8 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைப்புகளை வழங்கும். மேலும், 200க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கு எரிவாயுவை வழங்கும். அதோடு, 200க்கும் மேற்பட்ட இயற்கை எரிவாயு நிலையங்களை நிறுவும்.

சென்னையில் உள்ள மணலியில், ஆண்டுக்கு 672 ஆயிரம் மெட்ரிக் டன் திறன் கொண்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் மசகு எண்ணெய் கலவை ஆலையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். சுமார் ரூ.1,490 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலை, இந்தியாவின் மசகு எண்ணெய் உற்பத்தித் திறனை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 370 கி.மீ நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளை பிரதமர் திறந்து வைத்தார். இது கிராமப்புறங்களில் சந்தைகள், பள்ளிகள் மற்றும் சுகாதார வசதிகளுக்கான இணைப்பை கணிசமாக மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை 81 இல் கங்கைகொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இரண்டு அமிர்த பாரத் விரைவு ரயில்கள், இரண்டு விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணிகள் ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 

இந்த ரயில் போக்குவரத்து தமிழ்நாடு மற்றும் தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் கிழக்கு இந்தியா உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு இடையேயான ரயில் இணைப்பை வலுப்படுத்தும். இதன் மூலம் பயணிகள் பயனடைவதுடன், பிராந்திய பொருளாதார வளர்ச்சியும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages