சமம் குடிமக்கள் இயக்கம் அரசுக்கு கோரிக்கை - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, March 12, 2026

சமம் குடிமக்கள் இயக்கம் அரசுக்கு கோரிக்கை

       




சமையல் எரிவாயு சிலிண்டர் பிரச்சனை உடனடி தீர்வு காண

சமம் குடிமக்கள் இயக்கம் அரசுக்கு கோரிக்கை

__________________________

 

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு (எல்பிஜி) உருளை (சிலிண்டர்) கிடைப்பதில் தற்போது கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் பதிவு செய்ய முடியவில்லை. பதிவு செய்தும் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்கள் அன்றாட சமையலை நடத்தவே பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பல இடங்களில் மக்கள் கேஸ் ஏஜென்சிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

இது குறித்து சமம் குடிமக்கள் இயக்க மாநிலத்தலைவர் வழக்குரைஞர் சி.ஜே.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்


சமையல் எரிவாயு போன்ற பெட்ரோலிய பொருட்களின் அத்தியாவசிய தேவைகளின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை, ஒன்றிய  அரசின் திட்டமிடல் குறைபாடு மற்றும் நிர்வாக அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. சர்வதேச அளவில் உருவாகியுள்ள போர் சூழ்நிலைகள் மற்றும் எரிபொருள் விநியோக சிக்கல்களை முன்கூட்டியே கணித்து தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளாததன் விளைவாக பொதுமக்கள் இப்போது அவதிப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.


பொதுவாக இந்தியாவிடம் சுமார் 21 நாட்களுக்கு தேவையான எல்பிஜி இருப்பில் வைக்கப்பட்டிருக்கும். ஒன்றிய அரசு என்ன செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்காவது தாக்குபிடிக்கும்படியான கச்சா எண்ணெய் கையிருப்பை அதிகப்படுத்தி இருக்க வேண்டும். நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது பெட்ரோலிய அமைச்சர் , ‘நமக்கு 72 நாட்களுக்கு போதுமான எண்ணெய் கையிருப்பும், எல்பிஜி கையிருப்பும் உள்ளது; எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்’ என்றார்.


இந்த சிலிண்டர் தட்டுப்பாடு பொதுமக்களை மட்டுமல்லாமல் சிறு மற்றும் குறுநிறுவனங்களையும் கடுமையாக பாதித்து வருகிறது. தேநீர் கடைகள், சிறிய உணவகங்கள், டிபன் கடைகள், பேக்கரிகள், சிறிய ஹோட்டல்கள் போன்ற அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய பல சிறு தொழில்கள் சமையல் எரிவாயுவை முழுமையாக நம்பியே இயங்குகின்றன. சிலிண்டர் கிடைக்காததால் பல இடங்களில் இத்தகைய சிறு தொழில்கள் தற்காலிகமாக மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இதன் விளைவாக பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும், சிறு தொழில் முனைவோர் கடன் சுமையில் சிக்கிக் கொள்ளும் சூழலும் உருவாகியுள்ளது. தீப்பெட்டி மூலப்பொருட்களுக்கான விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் பொதுமக்களுக்கு அன்றாட உணவுப் பொருட்கள் மற்றும் சேவைகள் கிடைப்பதிலும் சிரமம் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் இது ஒரு பெரிய சமூக மற்றும் பொருளாதார பிரச்சினையாக மாறக்கூடும்


நாட்டில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் ஆகியவற்றுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்று நாடாளுமன்ற மக்களவையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங்புரி தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள 33 கோடி குடும்பங்களுக்கு எல்.பி.ஜி. கிடைப்பதை உறுதி செய்ய கடந்த ஐந்து நாட்களில் சுத்திகரிப்பு நிலையங்களில் உள்நாட்டு உற்பத்தி 28 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவை அதிகரிப்பை கட்டுப்படுத்தவும், சேமித்து வைப்பதை தடுக்கவும் நகர்ப்புறங்களில் எல்.பி.ஜி. சிலிண்டர் மீண்டும் பதிவு செய்ய குறைந்தபட்சம் 25 நாட்கள் இடைவெளி என்ற விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என புதனன்று கூறியுள்ளார். மக்களிடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தவிர்க்க வெறும் அறிவிப்பு மட்டும் போதாது.


 தமிழகத்திற்கு தேவையான அளவில் கூடுதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மூலம் தடையின்றி மற்றும் தாமதமின்றி சிலிண்டர்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். செயற்கையாக தட்டுப்பாடு உருவாக்கும் முகவர்கள் மற்றும் கையிருப்பை மறைக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டு பயன்பாட்டுடன் சேர்த்து சிறு தொழிலகங்கள் பயன்படுத்தும் எரிவாயு விநியோகத்திற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்பு குழுக்களை அமைத்து விநியோகத்தை கண்காணிக்க வேண்டும்.


பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையையும் சிறு தொழில் முனைவோரின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இந்த பிரச்சனையை  ஒன்றிய/மாநில அரசுகள் உடனடியாக தீர்க்க வேண்டும் என அரசுகளை சமம் குடிமக்கள் இயக்கம் கோருகிறது...

மாநிலத்தலைவர் சி.ஜே.ராஜன் தனது அறிக்கை வாயிலாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.



'

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages