செய்தியாளர் என்ற கோணத்தில் மிரட்டலும், வசூலும்... - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, September 7, 2026

செய்தியாளர் என்ற கோணத்தில் மிரட்டலும், வசூலும்...


 திருப்பாம்புரம் அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் நிர்வாகத்திற்கு எதிராக இணையவழி அவதூறு, ஆபாச மிரட்டல் – போலி நிருபர் மீது  போலீஸ் வழக்கு; தலைமறைவான நபரை கைது செய்ய ஐ.ஜி-யிடம் மேலாளர் புகார்!



திருவாரூர் மாவட்டம் குடவாசல்/நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு சேஷபுரீஸ்வரர் (ஸ்ரீ இராகு-கேது பரிகார ஸ்தலம்) திருக்கோயில் மேலாளர், பெண் பணியாளர் மற்றும் கோயில் நிர்வாகத்தைக் குறிவைத்து திட்டமிட்டு இணையவழியில் அவதூறு பரப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட முன்னாள் பணியாளர்களுடன் கைகோர்த்துக்கொண்டு, பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவித்து ஆபாச மிரட்டல் விடுத்த லாரி ஓட்டுநரான போலி நிருபர் மீது பேரளம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் குற்றவாளியைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் (IG) அவர்களிடம் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் நேரில் விரிவான புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.


செய்தியாளர் போர்வையில் அத்துமீறலும் வசூல் மிரட்டலும்


பேரளம் அருகே உள்ள கோவிந்தசேரி வடக்குத் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் மதன்மோகன் (வயது 40). லாரி ஓட்டுநரான இவர், தன்னை ‘மயிலை மதன்மோகன்’, பிரபல யூடியூபர் மற்றும் சென்னை 'ரிப்பன் மாளிகை செய்தியாளர்' எனப் போலி அடைமொழிகளுடன் சமூகத்தில் அடையாளப்படுத்திக் கொண்டு அரசு அலுவலர்களை மிரட்டி வந்துள்ளார்.


கடந்த 2026 மார்ச் மாதம், திருப்பாம்புரம் அருள்மிகு சேஷபுரீஸ்வரர் கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்த மதன்மோகன், மூலவர் மற்றும் சன்னதிகளில் வீடியோ எடுக்க முயன்றுள்ளார். அங்கு பணியில் இருந்த அர்ச்சகர்கள் ஜி.பிரேம்குமார் மற்றும் வி.கௌரிசங்கர் ஆகியோர் அவரிடம் பத்திரிகையாளர் அடையாள அட்டையைக் கேட்டபோது, அதைக் காட்ட மறுத்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து கோயில் மேலாளர் கே.வள்ளிகந்தன், "சுவாமி சிலைகளைப் படம் பிடிக்க அனுமதி இல்லை; விவரங்களுக்குச் செயல் அலுவலரிடம் பேசி அனுமதி பெறுங்கள்" எனக் கூறியதற்கு, "நீங்கள் எல்லாரும் திருட்டுப்பசங்கதான்" என ஒருமையில் திட்டிவிட்டு வெளியேறினார்.


இதுகுறித்து திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகங்களில் (PRO) அதிகாரிகள் மட்டத்தில் தீர விசாரித்தபோது, "மதன்மோகன் என்பவர் செய்தியாளரே இல்லை" என்பது திட்டவட்டமாக உறுதியானது. இவர் செய்தியாளர் என்ற பெயரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரிடம் பணம் வாங்கிக்கொண்டு அரசு அதிகாரிகளை அச்சுறுத்தி பணம் பறிப்பதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருப்பது அம்பலமானது.

பழிவாங்கும் நோக்கில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுடன் கூட்டு


இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் இத்திருக்கோயிலில் நிர்வாகக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியதால் பாதிக்கப்பட்ட சில கீழ் கண்ட முன்னாள் பணியாளர்கள், மேலாளர் மீது வன்மம் கொண்டு மதன்மோகனுடன் கூட்டணி அமைத்துள்ளனர்:

1. மணியம் அருண்ராஜ்:பக்தர்களிடம் முறைகேடாக பணம் பறித்தது, மதுபோதையில் பணிக்கு வந்தது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் சென்னை ஆணையர் உத்தரவுப்படி மதுரை பாலதண்டாயுதபாணி கோயிலுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட இவர், பழிவாங்கும் நோக்கில் மதன்மோகனைத் தூண்டிவிட்டுள்ளார்.

2. திருவலகு பணியாளர் வசந்தகுமாரி:உபக்கோயிலான கோயில்கந்தன்குடி அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் பணியைச் சரிவர செய்யாதது, அர்ச்சகரை அவதூறாகப் பேசியது மற்றும் மண்டபத் திருமணங்களில் கட்டாயப் பணம் கேட்டுப் பணியாளர்களை மிரட்டியது தொடர்பாக இவர் மீது ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. மேலும், கோயில் நுழைவாயிலில் அனுமதி இன்றி ஆக்கிரமித்து நடத்தி வந்த பூஜை/நெய்தீபக் கடைகள் நிர்வாகத்தால் பொது ஏலத்திற்கு விடப்பட்டதால் ஆத்திரமடைந்து, அதிகாரிகளுக்கு எதிராகச் செயல்பட்டு ஆணையர் உத்தரவுப்படி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

3. முன்னாள் செயல் அலுவலர் சுதாகர்:கூத்தனூர் அருள்மிகு மகாசரஸ்வதியம்மன் கோயிலில் பணிபுரிந்தபோது சில கோயில்களில் நிதி கையாடல் செய்த புகாரில் சிக்கி இடமாற்றம் செய்யப்பட்ட இவர், தன் மீதான புகார்களைத் தீர்த்து வைக்குமாறு மேலாளர் வள்ளிகந்தனிடம் கோரியுள்ளார். மேலாளர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், மதன்மோகனுக்குப் பண பலம் அளித்து கோயில் நிர்வாகத்தை மிரட்டப் பின்னணியாக இருந்துள்ளார்.


செயற்கை நுண்ணறிவு  மூலம் போலி செய்தி தயாரிப்பு


பழிவாங்கும் நோக்கோடு ஒன்றுதிரண்ட இந்தக் கும்பல், மதன்மோகன் மூலம் திருக்கோயிலின் புனிதத்திற்கும், மேலாளர் வள்ளிகந்தனின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க சதி செய்தது. அதன்படி, கூகுள் தேடுபொறி மற்றும் 'ChatGPT' போன்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களைப் பயன்படுத்தி, பத்திரிகை செய்தி போன்ற தோற்றத்தில் கலர் போஸ்டர்களை உருவாக்கினர்.


இப்போலிச் செய்திகளைத் திருப்பாம்புரம் சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் வாட்ஸ்அப் (WhatsApp), ஃபேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழியே திட்டமிட்டுப் பரப்பி, மேலாளர் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தற்கொலைக்குத் தூண்டும் வகையிலான கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தினர்.

பெண் ஊழியரின் கண்ணியத்தைச் சீரழித்த ஆடியோ – எஃப்.ஐ.ஆர் பதிவு

இதன் உச்சக்கட்டமாக, திருக்கோயில் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த பெண் ஒருவரோடு மேலாளரையும் இணைத்து மதன்மோகன் ஆபாசப் பேச்சுக்களைப் பரப்பியிறுக்கிறார். மேலும் அந்த பெண்ணின் பெண்மைக்கு களங்கம் உண்டாக்கும் வகையில், மதன்மோகன் மற்றொரு நபருடன் தொலைபேசியில் கொச்சையாகப் பேசிய உரையாடலை பதிவு செய்து வாட்ஸ்அப்பில் ஊர் முழுவதும் வைரலாக்கினார்.

இதனால் நிலைகுலைந்த அந்த பெண் மற்றும் கோவில் பணியாளர்கள் கடந்த 27-08-2026 அன்று பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். புகாரின் அடிப்படையில், முதல் நிலை காவலர் மகேஷ்குமார் வழக்கு பதிவு செய்ய, காவல் ஆய்வாளர் ஜி.ராஜ் புலனாய்வுப் பொறுப்பை ஏற்றார்.

• குற்ற எண்: 326/2026 (பேரளம் காவல் நிலையம்)

• பதிவு செய்யப்பட்ட சட்டப்பிரிவுகள்:

    ◦ பிரிவு 79 (பெண்ணின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் பேசுதல்/செயல்படுதல்)

    ◦ சட்ட பிரிவு 356 (அவதூறு பரப்புதல்)

    ◦ தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) பிரிவு 67 (மின்னணு வழியில் ஆபாச அவதூறுகளைப் பரப்புதல்)

தலைமறைவு & மேலாளருக்கு விடுக்கப்பட்ட ஆபாசக் கொலை மிரட்டல்

வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அறிந்த மதன்மோகன் கைதுக்கு அஞ்சி தலைமறைவானார். பின்னர், தன் மீது போலீசில் புகார் கொடுக்க வைத்தது மேலாளர்தான் எனக் கருதி, கடந்த 05-09-2026 அன்று மதியம் 1:45 மணியளவில் ஓரு கைபேசியிலிருந்து (எண்: 6379508942) மேலாளர் வள்ளிகந்தனைத் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது, பெண் ஊழியரின் கற்பை மீண்டும் இழிவுபடுத்திப் பேசியதுடன், மேலாளரின் தாயாரையும் மிகக் கொச்சையான ஆபாச வார்த்தைகளால் திட்டி, அவரைக் கொலை செய்துவிடுவதாக வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார்.

ஐ.ஜி அலுவலகத்தில் கூடுதல் புகார் – நடவடிக்கை கோரிக்கை

தொடர் மிரட்டல்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழல் நிலவுவதால், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி அலுவலகத்தில் மேலாளர் கே.வள்ளிகந்தன் 01-08-2026 மற்றும் 05-09-2026 ஆகிய தேதிகளில் விரிவான மனுக்களை அளித்துள்ளார்.

அம்மனுக்களில்:

• தலைமறைவாக உள்ள போலி நிருபர் மதன்மோகனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.

• அவருடன் கூட்டுச் சேர்ந்து பணமும் தகவல்களும் வழங்கி அவதூறு பரப்பத் தூண்டிய முன்னாள் பணியாளர்கள் மற்றும் செயல் அலுவலர் மீது துறை ரீதியாகவும், குற்றவியல் ரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

• திருக்கோயில் நிர்வாகத்தின் கண்ணியத்தைப் பாதுகாத்து ஊழியர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இம்மனுக்களின் நகல்கள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் (சென்னை), திருவாரூர் இணை ஆணையர் மற்றும் திருப்பாம்புரம் செயல் அலுவலர் ஆகியோரின் பார்வைக்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இணையப் போலிச் செய்திகள் மூலம் கோயில் நிர்வாகத்தை முடக்க முயன்ற இச்சம்பவம் ஆன்மீக அன்பர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages