வங்கி துறையில் வாரம் 5 நாட்கள் வேலையை அமல்படுத்த வேண்டும்.
கனரா வங்கி பணியாளர் சங்க
மாநில மாநாட்டில் தீர்மானம்
கனரா வங்கி பணியாளர்கள் சங்கத்தின் (தமிழ்நாடு) 4-வது மாநில மாநாடு, திருச்சி ஹோட்டல் அருணில் தோழர். எம்.ஆர்.ஷெனாய் அரங்கத்தில்
சனிக்கிழமை நடைபெற்றது.
கனரா வங்கி பணியாளர்கள் சங்க தலைவர் சிவலிங்கம்
மாநாட்டு கொடியை ஏற்றிவைத்து
தலைமை தாங்கினார்.
இணைச் செயலாளர் செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார். தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சுரேஷ் துவக்கவுரையாற்றினார்.
கனரா வங்கி பணியாளர் சங்க செயலாளர் வெங்கடேஷ்,
பிஇஎப்ஐ தமிழ்நாடு பொதுச் செயலாளர் சுனில்குமார், இணைச் செயலாளர் புவனேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநாட்டில் வங்கி துறையில் வாரம் 5 வேலை நாட்கள் பணியினை அமல்படுத்த வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை மேம்படுத்த வேண்டும். வங்கிப் பணியில் அனைத்து மட்டங்களிலும் தேவைக்கேற்ப ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும். நியாயமான மற்றும் வெளிப்படையான இடமாற்றல் கொள்கையை அமல்படுத்த வேண்டும். தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். துணைநிலை ஊழியர்களின் பிரச்சினைகளில் தீர்வு காண வேண்டும். வங்கி பெண் ஊழியர்களுக்கான அடிப்படை கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். வங்கி பணிகளில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஊதிய பாகுபாடுகளை களைய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில தலைவராக கே.செந்தில்குமார், மாநில செயலாளராக எஸ். பிரேமலதா, மாநில பொருளாளராக ஜி.கணேஷ் உட்பட 35 பேர் கொண்ட மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது.
முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது
கனரா வங்கி பணியாளர் சங்க மாநில செயலாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது :
இந்திய வங்கித்துறையில் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும்
யு.எப்.பி.யு
என்ற ஒரே அமைப்பின் கீழ் திரண்டு போராடி வருகின்றனர். வங்கி ஊழியர்களின் இந்த ஒற்றுமையைக் கண்டு மத்திய அரசு அச்சமடைந்துள்ளது. போராட்டத்தை முடக்கும் நோக்கில், ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கி ஊழியர்களை வேலைக்கு வரச் சொல்லி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும், ஊழியர்களின் போராட்ட உணர்வை இது சற்றும் அசைக்க முடியாது.
வாரத்தில் 5 நாட்கள் வேலை என்பது புதிதாக வைக்கப்பட்ட கோரிக்கை அல்ல. 2015-ம் ஆண்டு முதல் வலியுறுத்தப்பட்டு, 2024-ல் இந்திய வங்கிகள் சங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்ட கோரிக்கையாகும். ஒப்புக்கொண்ட கோரிக்கையையே அமல்படுத்தக் கோரி தற்போது போராட்டம் நடத்தப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் அதிக பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக நாடு முழுவதும் சுமார் 500 வங்கி அதிகாரிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடந்த 2021-22 நிதி ஆண்டில் ரூ.66,543 கோடியாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் லாபம், 2025-26 நிதி ஆண்டில் ரூ.1.98 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. லாபம் 3 சதவீதம் வரை அதிகரித்துள்ள அதேவேளையில், ஊழியர்களின் எண்ணிக்கை 7.84 லட்சத்தில் இருந்து 7.57 லட்சமாகக் 3 சதவீதம் குறைந்துள்ளது. இது கடுமையான பணிச்சுமையைக் காட்டுகிறது.
பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதைக் கண்டித்தும், ஊழியர் பற்றாக்குறையைப் போக்கக் கோரியும், தினக்கூலி ஊழியர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தியும் வருகிற அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மாபெரும் அகில இந்திய வங்கி வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. இதனால் வங்கிச் சேவைகள் முற்றிலும் ஸ்தம்பிக்கும்.
மக்களுக்கு ஏற்படும் தற்காலிக அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதோடு, பொதுமக்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
நிறைவாக, கனரா வங்கி பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் பிரேமலதா நன்றி கூறினார்.

No comments:
Post a Comment