தனியார் வங்கிகளையும் பொதுத்துறை வங்கிகளாக
மாற்றினால் தான்
கிராமப்புறங்களுக்கும்,
மலை பிரதேசங்களுக்கும் வங்கி சேவைகளை முழுமையாக விரிவாக்க முடியும்
இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தமிழ்மாநில 14 வது மாநாடு திருச்சியில் இன்றும் நாளையும் ( 25, 26-ந் தேதிகளில்) நடைபெறுகிறது. இது குறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.ரவிக்குமார் மற்றும் மாநில தலைவர் எஸ். சுனில்குமார் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
1969இல் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட பிறகு சாமானிய மக்களுக்கும் வங்கி கடன்களும், சமூகத் திட்டங்களின் பலன்களும் பரவலாக சென்றடைந்தன. ஆனால் இன்று ஒன்றிய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது மக்களுக்கு எதிரான நடவடிக்கையாகும். இது நாட்டின் பொதுத்துறை வங்கி அமைப்பை பலவீனப்படுத்துவதோடு அனைவருக்குமான வங்கி சேவையும் பாதிக்கும். கடந்த கால வங்கி இணைப்புகள் எதிர்பார்த்த பலன்களை தரவில்லை. மாறாக நிர்வாக சுமை அதிகரிதத்துடன் வங்கி சேவைகளை சாமானிய மக்கள் அணுகுவதை குறைத்தது. வாடிக்கையாளர் சேவையும் பாதிக்கப்பட்டது.
தனியார் வங்கிகளையும் பொதுத்துறை வங்கிகளாக
மாற்ற வேண்டும். அப்போதுதான் ,
கிராமப்புறங்களுக்கும்,
மலை பிரதேசங்களுக்கும் வங்கி சேவைகளை முழுமையாக விரிவாக்க முடியும்.
கடன் வசூல் என்ற பெயரில் பெரிய நிறுவன கடனாளிகளுக்கு மிகப்பெரிய கடன் தள்ளுபடி வழங்கப்படுவதால் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.
ஒன்றிய அரசு, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் வங்கி நிர்வாகிகள் இணைந்து வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாத கடனாளிகளிடமிருந்து முழுத் தொகையும் வசூலிக்கும் வகையில் கடுமையான சட்டங்களை இயற்றி, மக்களின் பணத்தை பாதுகாக்க வேண்டும். ஒன்றிய அரசு கூட்டுறவு துறைக்கான தனி அமைச்சகத்தை அமைத்து இருப்பது மாநிலங்களின் அதிகாரங்களில் தலையீடு செய்வதாகும். இந்த நடவடிக்கையை இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. கேரளாவைப் போல தமிழகத்திலும் மத்திய கூட்டுறவு வங்கிகளை ஒருங்கிணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்கப்பட வேண்டும். அதேபோல் அனைத்து கிராம வங்கிகளையும் ஒன்றிணைத்து இந்திய தேசிய கிராம வங்கி அமைக்க வேண்டும்.
வாடிக்கையாளர்களிடமிருந்து பல்வேறு வங்கி சேவைகளுக்காக
அதிகப்படியான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. காசோலை திரும்பினால் கட்டணம், குறைந்தப்பட்ச இருப்பு தொகை இல்லையென்றால் அபராதம்
என சாதாரண மக்களின் மீது தேவையற்ற சுமையை ஏற்படுத்துகிறது.
எனவே இத்தகைய அநியாயமான சேவைக் கட்டணங்களை ரத்து செய்து, வங்கி சேவைகளை அனைவருக்கும் எளிதாகவும், மலிவாகவும் வழங்க வேண்டும். வங்கிகளில் எழுத்தர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு கடுமையாக குறைந்துள்ளது. துணைநிலை பணியாளர்களை நியமிப்பதை முற்றிலும் நிறுத்தியுள்ளன.
போதிய ஊழியர்களை நியமிக்காமல்
வெறும் இயந்திரங்களை மட்டும் வைத்து கொண்டு சேவை வழங்க முடியாது. இதனால் வாடிக்கையாளர் சேவையும், ஊழியர்களின் வேலை - வாழ்க்கை சமநிலையும் பாதிக்கப்பட்டுள்ளன.
வங்கிகளில் பணிச்சுமை காரணமாக இதுவரை 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மன உளைச்சலால் உயிரிழந்துள்ளனர்.கடுமையான பணிச்சுமையை குறைக்க வாரத்திற்கு 5 நாட்கள் வேலை திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதுகுறித்து பேச்சு வார்த்தையில் ஒப்புக்கொண்ட போதிலும், அரசு இன்னமும் அரசாணை வெளியிடாமல் தாமதித்து வருகிறது. அனைத்து வங்கிகளிலும் பெண் ஊழியர்களுக்கு தனி கழிப்பறை மற்றும் ஓய்வறை
வசதிகள் உறுதி செய்ய வேண்டும். இந்த மாநாட்டில் பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் நலம் சார்ந்த பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இந்த மாநாட்டை அகில இந்திய பொதுச் செயலாளர்
தேபாசிஸ் பாசு சௌதுரி துவக்கி வைக்கிறார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் கண்ணன், கீழ்வேளூர் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் லதா
மற்றும் அகில இந்திய தலைவர்
அனில் ஆகியோர் மாநாட்டில் சிறப்புரையாற்றுகின்றனர் என்றனர். பேட்டியின் போது வரவேற்புக்குழு செயலாளர் ஹேமன்குமார், பொருளாளர் ரகுராமன் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment